
வவுனியா இலுப்பையடி முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதியான தூயகுமார் சிதர்சன் (வயது 25) என்பவர் மீது கத்தி குத்து நடாத்திவிட்டு இருவர் தப்பிச் சென்ற சம்பவம் நேற்று முன்தினம் (13.12.2015) இரவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா இலுப்பையடி முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலிருந்து முச்சக்கர வண்டியினை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு ஒட்டிசுட்டானிலிருக்கும் அம்மாவிற்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கூறிய இருவர் முச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர்.
ஒட்டிசுட்டான் சந்தியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் வீட்டிற்கு சென்றுவிட்டு இருவரும் உடனடியாக வந்து அம்மாவை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டதாக கூறி முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு செல்லுமாறு தெரிவித்து சென்று கொண்டிருக்கையில் முச்சக்கரவண்டியை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி தொலைபேசியில் உரையாடுவது போல் பாசாங்கு செய்துவிட்டு முச்சக்கரவண்டி சாரதியின் பின்பக்கம் தலையில் காட்டுக்கத்தி கொண்டு தாக்கியுள்ளனர்.
காயம் ஏற்பட்டதையடுத்து முச்சக்கரவண்டியினை செலுத்துமாறு கூறியதுடன் மிரட்டும் பாணியையும் மேற்கொண்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி முச்சக்கரவண்டியை செலுத்தி வருகையில் சிறிது தூரம் வந்ததும் முச்சக்கரவண்டியினை நிறுத்துமாறு கோரியதுடன் மறுபடியும் சாரதி மீது தாக்குதல் நடாத்திவிட்டு முச்சக்கர வண்டியில் சென்ற இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணையினை ஒட்டிசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






