
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு கூட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த வருடம் பெப்ரவரியில் வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்த அவர், வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துப் பேசிய பின்னரே இவ்வாறு கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாகக் காணப்படும் பரிமாற்றங்களை வலுப்படுத்துவது, ஒத்துழைப்புக்களை தீவிரப்படுத்துவது போன்றன தொடர்பாக, இரு அரசுகளுக்கும் இடையில் கூட்டுப் பேச்சை ஆரம்பிப்பது குறித்து, கடந்த மே மாதம் அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது கூட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.





