
வவுனியாவில் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு அவர்களுக்கு தேவையான சீருடையினை மட்டும் வழங்குமாறும் அதற்கு மேலாக மாணவர்களிடம் பணம் அறவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அண்மையில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு விநியோகிக்கப்பட்ட வவுச்சர்களுக்கு அதன் பெறுமதிக்கான சீருடைகளை வழங்காது மேலதிகமாக மாணவர்களிடம் பணம் அறிவிட்டு தரமான சீருடை தருவதாகக் கூறி சில வியாபார நிலையத்தில் பணம் அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு இது தொடர்பாக வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வியாபார நிலைய உரிமையாளர்களிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளும் போது தன்னால் பூரணமாக அறிவுறுத்தப்பட்டதாகவும், தரமாக சீருடைகள் மாணவர்களுக்கு வழங்குமாறு பணிக்கப்பட்டதாகவும், சீருடை வழங்குவதற்குத் தேவையான சகல வழிமுறைகள் நடைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்த கல்விப் பணிப்பாளர்,
வவுச்சர்கள் கொடுத்து பணம் பெறுவது உட்பட சீருடைகளை கொடுத்து பணம் பெறுவது போன்றசெயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வவுனியாவில் 20 வர்த்தக நிலையங்களில் வவுச்சர்களுக்கு சீருடை பெற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் இது தொடர்பாக வியாபார நிலைய உரிமையாளர்கள் விசாரணைக்குட்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.





