எங்கள் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா? பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மறுப்பு!!

325

pakistan

மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சூதாட்டம் நடந்திருப்பதாக வந்த செய்தியை, லத்திப், மோயின் கான் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மறுத்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் பாகிஸ்தான் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

இத்தொடரின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக, இங்கிலாந்தில் வெளியாகும் “டெய்லி மெயில்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதில், போட்டியின் குறிப்பிட்ட ஓவரில் ஓட்ட வீதம் வித்தியாசமானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தவிர ஒரு சூதாட்டம் தொடர்பான இணையதளத்தில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அதிக அளவில் பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் போது அல்லது தொடரை கைப்பற்றும் போது இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகள் வெளியாகின்றன. இது அணியில் உள்ள வீரர்களிடம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வீரர்கள் தொடர்ந்து போட்டியில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்திப் கூறுகையில்

இவ்விஷயத்தை ஐ.சி.சி அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும். இவ்விவகாரத்தை சட்ட பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் மோயின் கான் கூறுகையில்

ஆதாரமற்ற இந்த செய்தி குறித்து ஐ.சி.சி சார்பில் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்த செய்தியும் சந்தேகத்தின் பேரில் வெளியானது. இது பாகிஸ்தான் வீரர்களை வருத்தமடைய செய்யும். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.