இத்தாலியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகினர். இத்தாலியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து நேற்று இரவு அவெல்லினோ பகுதியில் சென்று கொண்டிருக்கையில் போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலையில் செல்கையில் மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
பள்ளத்தில் விழும் முன்பு அந்த வழியாக சென்ற கார்கள் மீது பேருந்து மோதியது. 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 36 சடலங்களை எடுத்தனர். மேலும் காயம் அடைந்த 11 பேரை மீட்டனர். இறந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் அமரலாம். அந்த பேருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான தென்கிழக்கு பக்லியா பகுதிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புகையில் தான் இந்த விபத்து நடந்துள்ளது.
மலைப் பகுதியில் பேருந்து மிதமான வேகத்தில் தான் சென்றது என்றும், ஆனால் திடீர் என்று அவ்வழியாக சென்ற கார்களை இடித்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.