
வேலூர் காட்பாடி அருகே கல்லூரி விடுதி நிர்வாகம் கொடுத்த சித்ரவதையால் மாணவி ஆசிட் குடித்து தற்கொலை செய்துள்ளார்.காட்பாடி கல்புதூர் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த பாலு (42), என்ற கூலித்தொழிலாளியின் மகள் ராதிகா(19), கரிகிரி நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 3ம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார்.
கடந்த 3ம் திகதி மாணவியின் தந்தை பாலுவை தொடர்பு கொண்ட கல்லூரி நிர்வாகம், உங்கள் மகள் ஆசிட் குடித்துவிட்டாள்.அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ராதிகா கலெக்டருக்கு எழுதிய 6 பக்க கடிதம் கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில், எனக்கும் என்னுடன் படிக்கும் மாணவிக்கும் தவறான உறவு இருப்பதாக கல்லூரி முதல்வரும், விடுதி வார்டனும் என் மீது பழி சுமத்தினர்.இதுமட்டுமின்றி, பல்வேறு வழிகளில் என்னை சித்ரவதை செய்து மனதளவில் கொடுமைப்படுத்தினர்.இதனால், மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றேன். பின்னர், தாய் தந்தையை நினைத்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன்.
ஆனால், தொடர்ந்து என்னை சித்ரவதை செய்ததால் நான் ஆசிட் குடித்துவிட்டேன் என எழுதியுள்ளார்.இதுகுறித்து மாணவியின் தந்தை பாலு கடந்த வாரம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் மாணவி ராதிகா உயிரிழந்துள்ளார்.தற்போது இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





