
சுதந்திர இலங்கையில் முதல் முறையாக அரசியல் சாசனம் அமைப்பதில் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பங்கெடுக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.1972ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தாலும் 1978ம் ஆண்டுகளில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தாலும் இலங்கையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்களில் தமிழ் தரப்புக்கள் பங்கேற்கவில்லை.
இது இவ்வாறு இருக்க முழு பாராளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.இதன்படி பாராளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்ற வழிகாட்டும் குழுவில், எதிர்கட்சி என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்கவுள்ளது.
மேலும் அண்மையில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை இயக்கத்தினால், அரசியல் தீர்வு சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமான ஆவணமொன்றை முன்வைப்பதற்காக 15 பேர் கொண்ட உப குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக அமைச்சரவை அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமைகள் குழு மற்றும் பொது பிரதிநிதித்துவ உப குழுக்களில் தமிழர் முற்போக்கு கூட்டணி சார்பில் தமது பிரதிநிதிகளை, கூட்டமைப்பின் தலைவர், அமைச்சர் மனோ கணேசன், பரிந்துரை செய்துள்ளார்.





