
மகாராஷ்டிராவில் யூசுப் முகாட்டி என்ற நபர் ‘ரொட்டி வங்கி’ தொடங்கி ஏழைகளின் பசியை போக்கி வருகிறார்.அவுரங்காபாத்தில் யூசுப் முகாட்டி (38) என்பவர் கடந்த 5ம் திஹதி ரொட்டி வங்கி தொடங்கியுள்ளார்.அவர் மேலும், ‘ஹாரூண் முகாட்டி இஸ்லாமிக் சென்டர்’ என்ற அமைப்பையும் நிறுவி ஏழை மக்களுக்கு உதவி வருகிறார்.
அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற அவுரங்காபாத்தில், யூசுப்பின் சேவைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.இதுகுறித்து யூசுப் கூறுகையில், ஏழைகள் குறிப்பாக முஸ்லிம்கள் பலர் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுவதை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன்.
என் மனைவி கவுசர் மற்றும் திருமணமான 4 சகோதரிகள் சீமா ஷாலிமார், மும்தாஜ் மேமன், ஷாநாஸ் ஷபானி, ஹூமா பரியானி ஆகியோருடன் இது பற்றி நான் கலந்தாலோசித்தேன்.அவர்கள் எல்லோரும் மனதார ஒப்புக் கொண்டு உதவ முன்வந்ததால், கடந்த 5ம் திகதி ரொட்டி வங்கியை திறந்தோம்.முதலில் 250 பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்ந்த நிலையில், பலரும் விசாரிக்க தொடங்கினர்.
ரொட்டி வங்கியில் உறுப்பினராக சேர ஒரு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும்.அவர்களுக்கு நாங்கள் தனி கோட் நம்பர் தருவோம். மேலும் கோட் நம்பருடன் தனி பை ஒன்றும் தருகிறோம்.உறுப்பினர்கள் தினமும் குறைந்தபட்சம் புதிதாக செய்யப்பட்ட 2 ரொட்டிகள் மற்றும் சைவ, அசைவ உணவு குழம்புகளை வங்கியில் கொடுக்க வேண்டும்.15 நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து விட்டது.காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை ரொட்டி வங்கி செயல்படும்.
பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இங்கு ரொட்டிகளையும், சைவ, அசைவ உணவுகளையும் வழங்கி விட்டு செல்கின்றனர்.சில வேளைகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவு உணவு கிடைத்து விடுகிறது.சுமார் 500 பேருக்கு ரொட்டி வங்கி மூலம் தினமும் உணவு வழங்கி வருகிறோம்.எங்கள் ரொட்டி வங்கி பற்றி கேள்விப்பட்ட திருமண ஏற்பாட்டாளர்களும், கூடுதலாக உள்ள உணவு வகைகளை அனுப்ப தொடங்கி உள்ளனர்.வங்கிக்கு வரும் உணவு தரமானதாக, புதிதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தே வாங்குகிறோம் என கூறியுள்ளார்.





