
தமிழகத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நான்கு இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மற்றுமொருவர் தேடப்பட்டு வருகின்றார். தமிழகத்திலுள்ள மொடக்குறிச்சி வட்டாரம் முத்துக்கவுண்டன்பாளையம், கேட்டுபுதூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரரான கருப்பண்ணன் என்பவர் வீட்டிலேயே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
கடந்த, 27ம் திகதி இரவு வீட்டுக்குள் நுழைந்த சிலர், கருப்பண்ணன் மற்றும் இவரது மனைவியை தாக்கிவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக, நேற்று முன் தினம் மொடக்குறிச்சி பொலிசார், இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியை சேர்ந்த இருவரையும், திருச்சி மாவட்டம் ரஞ்சிதபுரம் ஜீவா வீதியை சேர்ந்த ஒருவரையும் தொட்டியம் கொளக்குடி அடுத்த ரெட்டியார் வீதியிலுள்ள ஒருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என, தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த கொள்ளையுடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேகநபரான நாமக்கல் மாவட்டம் மேட்டுபட்டி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த 30 வயதான ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.





