
விமான பணிப்பெண்ணை தாக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ரொறென்ரொவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு ஏர் கனடா விமானம் ஒன்று புதன்கிழமையன்று புறப்பட்டது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்கரன் சித்து என்பவரும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான பணிப்பெண்ணை தாக்க தொடங்கியுள்ளார்.
இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக விமானம் மீண்டும் பியர்சன் விமான நிலையத்துக்கே திருப்பப்பட்டது.விமானம் தரையிறக்கப்பட்டதும் ஜஸ்கரனை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீது காயம் ஏற்படும்படி தாக்கியது, விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது மற்றும் தீங்கு விளைவித்ததாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மற்ற பயணிகள் தங்கள் பயணத்தை தொடருவதற்காக வேறு விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தால் பியர்சன் விமான நிலையத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.





