பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா?

673

Facebook

இந்தியாவில் ஃபேஸ்புக் தரும் மட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை இதுவரை இணையத்தை பயன்படுத்தாத ஏழைகளுக்கு பயனளிக்குமென அந்நிறுவனம் கூறுகிறது.ஆனால் இது இணைய சமநிலையை குலைக்கும், இணைய வெளியை தனியார் மயமாக்கும் என்று எதிர்ப்புகள் எழந்துள்ளன.

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தர விரும்பும் மட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.இதுவரை இணைய வசதியே இல்லாத அல்லது இணையத்தையே பயன்படுத்தாத செல்பேசி பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை தருவதே தமது முக்கிய நோக்கம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.

ஆனால் இப்படியான கட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை என்பது இணையத்தின் பொதுத்தன்மையை, சமநிலையைக் குலைத்துவிடும் என்றும் இணையத்தில் செயற்படும் வணிக, வர்த்தக நிறுவனங்கள் அனைத்துக்கும் இதில் வாய்ப்பளிக்கப்படாது என்பதால் இணைய வர்த்தகவெளியை இது சமனற்றதாக மாற்றிவிடும் என்றும் அனைவருக்கும் பொதுவான இணையத்தை ஃபேஸ்புக் தனது வர்த்தக நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தும் சூழலுக்கு இது வழி வகுக்கும் என்றும் இதன் எதிர்ப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த இலவச இணைய முன்னெடுப்பை இந்திய அரசு இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் இதன் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த விஷயத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முழுமையான உண்மைகளை சொல்லவில்லை என்றும், தனது உண்மையான வர்த்தக நோக்கங்களை வெளிப்படையாக கூறாமல் இலவச சேவையை தொண்டு நோக்கில் செய்வதாகக் கூறும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பு நம்பும்படியாக இல்லை என்றும் கூறுகிறார் இணையத்தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து எழுதிவரும் பத்ரி சேஷாத்ரி.

“இந்தியாவுக்கு இலவச இணையம் பயன் தரும்”

அதேசமயம், இதுவரையில் இணையமே அறியாத, இணையம் குறித்து அறிவதற்கும், ஏழ்மை காரணமாக இணையத் தொழில்நுட்பத்தை இதுவரை பயன்படுத்தாத கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் ஃபேஸ்புக் முயற்சியை முற்று முழுதாக நிராகரிப்பதும் புறந்தள்ளுவதும் சரியல்ல என்றும் பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்.ஃபேஸ்புக் ஏற்படுத்திக் கொடுக்கும் இலவச இணைய சேவையை இந்தியாவில் அனுமதிப்பதும் தொடர்ந்து அதை கடுமையாக கண்காணிப்பதுமே சரியான அணுகுமுறையாகவும் இருக்கும் என்கிறார் அவர்.