
தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு இந்த ஆண்டு தித்திப்பு நிறைந்த ஆண்டு என்று சொன்னால் மிகையாகாது.2015–ம் ஆண்டில் 9 டெஸ்டில் விளையாடி 62 விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். அத்துடன் 3 அரைசதம் உள்பட 248 ஓட்டங்களும் சேர்த்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை டெஸ்ட் தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு இவரது சுழல் ஜாலம் தான் பக்கபலமாக அமைந்தது.தென் ஆப்பிரிக்க தொடரில் மட்டும் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமிப்பூட்டினார். கடந்த ஜனவரி மாதம் 15–வது இடத்தில் இருந்த அஸ்வின், தரவரிசையில் சீராக ஏற்றம் கண்டு இப்போது மைல்கல்லை எட்டியிருக்கிறார்.
இந்திய பந்துவீச்சாளர்களின் ஒருவர் ஆண்டின் இறுதியை ‘நம்பர் ஒன்’ இடத்துடன் நிறைவு செய்வது 42 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.கடைசியாக 1973–ம் ஆண்டு பிஷன்சிங் பெடி இத்தகைய சிறப்பை பெற்றிருந்தார். அது மட்டுமின்றி ஒட்டுமொத்தத்தில் பிஷன்சிங் பெடி மட்டுமே இதற்கு முன்பு இந்திய பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்தவர் ஆவார்.
சந்திரசேகர், கபில்தேவ், அனில் கும்பிளே உள்ளிட்ட புகழ்பெற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் எல்லாம் தங்களது காலத்தில் அதிகபட்சமாக 2–வது இடம் மட்டுமே பிடித்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.அஸ்வினுடன் இணைந்து முதல் 10 இடத்துக்குள் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் உள்ளார். ஜடேஜா ஒரு இடம் ஏற்றம் பெற்று 6–வது இடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





