
இந்தியாவுடன் “சீபா” உடன்படிக்கை கையெழுத்திடப்படமாட்டாது. அதற்குப் பதிலாக வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை கையெழுத்திடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சபை முதல்வரும், அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்,
இந்தியாவுடன் சீபா (பரந்த பொருளாதார உடன்படிக்கை) கையெழுத்திடப்படப் போவதாகவும். இதனால் இலங்கையை இந்தியா ஆக்கிரமித்துவிடும் என்றும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இதில் உண்மையெதுவுமில்லை. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெளிவான அறிக்கையொன்றை விடுத்தார்.
தனது இந்திய விஜயத்தின் போது சீபா உடன்படிக்கை தொடர்பாக பேசப்படவில்லை. அவ் உடன்படிக்கை கையெழுத்திடப்படமாட்டாது என்றும் தெரிவித்தார். தேசப்பற்று தொடர்பாக பேசும் உதய கம்மன்பில போன்றோர் எமது நாட்டுப் பிரதமரின் கருத்தை நம்பாது வெளிநாடுகளில் கருத்துக்களுக்கு முதலிடம் வழங்குகின்றார்கள். இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கைதான் கையெழுத்திடப்படவுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
எனவே இந்தியாவுடன் நட்புறவை சீர்குலைப்பதற்கு உள் நாட்டிலுள்ள சில தீய சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றார். இதேவேளை இலங்கை, இந்தியா இடையேயான (ETCA) வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை தொடர்பான நகல் பெப்ரவரி மாதம் கையெழுத்திடப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகவும் அறிய வருகிறது.





