இளமையைக் கூட்டும் இளநீர்..

600

செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல, உடல் நலத்தையும் கெடுத்துவிடும். இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க, குளிர்பானங்கள் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே, அது தரும் பலன்களும் அதிகம்!
இளநீரில் இருக்கும் இனிப்பான விஷயங்கள் யாதெனில், ”இளநீர், நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. விட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன், ஃபோலேட் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களும் அதிகம். 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. இரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச் சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இளநீரின் மருத்துவப் பலன்கள்:

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம். இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.



இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இளநீர் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது. இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால், கூடுதல் ரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் இது நல்ல மருந்து.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். கல்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் கலவை அதிகமாக இருப்பதால், சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.

முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

இதில் உள்ள செலினியம் போன்ற அன்டிஒக்ஸிடென்ட்கள், புற்றுநோய்த் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படும். இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு இளமையையும் அள்ளித்தரும். இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால், முதுமைத் தோற்றத்தை தடுக்கும். காலையில் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது.

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், உடலில் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இளநீர் பருகலாம். தினமும் ஓர் இளநீர் குடித்துவந்தால். வாழ்நாள் முழுவதும் திடகாத்திரமாகவும் உற்சாகத்துடனும் வலம் வரலாம்.