
விரைவில் சர்வதேச நிதி நெருக்கடி நிலமை ஏற்படும் என்று இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல வர்த்தகர் ஜோர்ஜ் சொரொஸ் கூறியுள்ளார். சீன நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொருட்களின் விலை குறைவடைவதனால் நுகர்வோருக்கு தற்காலிக சலுகைகள் கிடைத்துள்ளதாகவும், தற்போதுள்ள நிலமையில் 2008ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற நிதி நெருக்கடி நிலமை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலமைகள் குறித்து தனது முதலீட்டு குழுவினருக்கு கவனமாக செயல்படுமாறு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக, 2016 இலங்கை பொருளாதார மாநாட்டில் ஜோர்ஜ் சொரொஸ் கூறியுள்ளார்.2016 இலங்கை பொருளாதார மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானதுடன், இம்மாநாட்டிற்கு வருகை தருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு தான் மகிழ்ச்சியடைவதாகவும் ஜோர்ஜ் சொரொஸ் கூறியுள்ளார்.
இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்தங்கிய நிலையில் அல்லாமல் தொடர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோசப் ஸ்டிக்லி உட்பட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.இம்மாநாடு இன்றைய தினமும் இடம்பெறுகின்றது.





