
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட உள்நாட்டு வௌிநாட்டு பிரமுகர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்திய சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியின் பேரனான கோபால் கிருஷ்ண காந்தி இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இது தவிர ஜனாதிபதி தலைமையிலான அரசு, நாடு மற்றும் நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி களுத்துறை விகாரையில் இன்று காலை 7.00 மணிக்கு மத வழிபாடுகள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 117 வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று காலை காலி முகத்திடலில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறுகின்றது.
அத்துடன் காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் நினைவாக மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இது தவிர நாளை பாராளுமன்றம் மீண்டும் கூடுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றிற்கு வருகை தரவுள்ளார். அதன்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.





