
இன்றையதினம் புதிய அரசியல் யாப்பினை தயாரிப்பதற்காக, நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.அத்துடன் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இதற்கிடையில், இந்த செயற்பாடு குறித்து, நேற்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று ஒருவருடம் பூர்த்தியானதை குறிக்கும் நிகழ்வில், ஜனாதிபதி உரையாற்றி இருந்தார்.நாட்டை பிரிக்க முற்படுவதாகவும், புத்த மதத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், இராணுவத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்க விருப்பதாகவும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால் அவ்வாறில்லாமல், அவர்களுக்கு புரியாத புதிய விடயம் ஒன்றையே தாம் அறிமுகம் செய்யவிருப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த யோசனை குறித்த கருத்தை முன்வைத்திருந்தார்.இன்றையதினம் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்படுகிறது.
இதற்கு ஆதரவானவர்களும் உள்ளனர், எதிரானவர்களும் இருக்கின்றனர்.ஆனால் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைந்து பயணிப்பதா? அல்லது மக்களின் கருத்துக்களை நிராகரித்த முன்னைய ஆட்சி காலத்தை நோக்கி நகர்வதா? என்பது தொடர்பிலேயே தீர்மானிக்க வேண்டி இருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.





