
பெருந்தோட்டங்களுக்கு அருகில் மது விற்பனை நிலையகங்கள் அமைக்கப்படுவதை தடுக்கவேண்டும், என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இந்தக்கோரிக்கையை, தாம் இந்த வாரம் இடம்பெற்றவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமம், சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
வெலிமடை டயரபா தோட்டத்தை சேர்ந்த ஒருவர், மரணமான சம்பவத்தை அடுத்தே அமைச்சரின் இந்த கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ளது.பெருந்தோட்டங்களுக்கு அருகில் மது விற்பனையகங்கள் அமைக்கப்படுவதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர் மத்தியில் மதுபழக்கம் அதிகரித்து வருகிறது.
அத்துடன் சமூக சீரழிவு செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.தொடர்ந்தும் பெருந்தோட்டப் புறங்களில் கல்வியபிவிருத்தி ஏற்படாமல் இருப்பதற்கும் மதுபான பாவனையே காரணமாக இருந்து வருகின்றது.தோட்ட தொழிலாளர்களின் வருமானம் ஏற்கனவே குறைந்துள்ள நிலையில் மதுவின் தாக்கம் அந்த வருமானத்தில் பெருமளவை இழக்கச்செய்கிறது.
மதுபழக்கம், இனங்களுக்கு இடையிலான உறவில் பாதிப்பை கொண்டு வருகிறது.இந்தநிலையில் மது ஒழிப்புத் திட்டங்களுக்கு சமூக ஆர்வலர்கள் முன்னின்று செயற்பட முன்வரவேண்டும்.இதற்கான செயற்பாடுகளுக்கு தமது அமைச்சும் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெருந்தோட்டப்புறங்களுக்கு அருகில் மதுவிற்பனையகங்களுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என்றும்,
ஏற்கனவே, அமைக்கப்பட்டுள்ள மதுவிற்பனையகங்களை மூடவேண்டும் என்றும் தாம், ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.





