1வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி!!

264

Aus

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டி தொடரில் விளையாட அவுஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இதன் படி இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ஷிகர் தவான் 22 பந்துகளை சந்தித்து 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதன் பின்னர் கோஹ்லி, ரோஹித் சர்மா ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. கோஹ்லி 61 பந்திலும். ரோஹித் சர்மா 63 பந்திலும் அரைசதத்தை அடித்தனர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரோஹித் சர்மா சதம் விளாசினார்.

இந்த நிலையில் தொடர்ந்து பொறுமையாக விளையாடி வந்த கோஹ்லி சதத்தை தவறவிட்டார். இந்த ஜோடி 207 ஓட்டங்கள் சேர்த்தது. கோஹ்லி 97 பந்தில் 91 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் டோனி 18 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்களை எடுத்தது.

310 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிஞ்ச் 8 ஓட்டங்களிலும், வோர்னர் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக வந்த அணித்தலைவர் ஸ்மித்- பெய்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

பெய்லி 112 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த மெக்ஸ்வெல்லும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்கவே, ஸ்மித் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார்.

வெற்றிக்கு மூன்று ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஸ்மித் 149 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார், தொடர்ந்து விளையாடிய மார்ஷ் 12 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் 49.2 ஓவர்களில் 310 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.