ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையினரின் ஏற்பாட்டில்.. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் அனுருத்தனன் தலைமையில் மேற்படி விழா நேற்று (12.01.2016) நடைபெற்றது.
நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாக, வரவேற்பு நடனம் கற்சிலைமடு அ.த.க.பா மாணவர்கள் நிகழ்த்தினர். கலைஞர் வேதவனத்தின் வரவேற்புரை வசீகரமாக காணப்பட்டது.
தலைமையுரையின் பின்னர் முல்லைத்தீபனின் முத்தெழிலுடன் முல்லைமணி புகழ்பாடல் இடம்பெற்றது.
தொடர்ந்து திருமதி முல்லைமணியின் உரைக்குப்பின்னர் அடங்காப்பற்றான் அருணா செல்லத்துரையின் ‘முல்லைமணி ஒரு சகாப்தம்’ எனும் சிறப்புரை நடைபெற்றது. மேலும் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் விசேட உரையாற்றியிருந்தார்.
தனது காலத்தில் முல்லைத்தீவுக்கு ஜனாதிபதியின் கரங்களால்.. முல்லைமணி ஐயாவுக்கு வழங்கப்பட்ட ‘சாகித்ய ரத்னா’ விருதின் பெறுமதியை பெருமனதுடன் நினைவு கூர்ந்தார். அத்துடன் இறுதி வரை நிகழ்வில் கலந்து கொண்டு.. விருந்தினர்கள், அரச ஊழியர்கள், மக்கள் என்போருடன் விருப்புடன் விருந்துபசாரத்திலும் ஈடுபட்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.
விசேட நிகழ்வுகள் இரண்டு நடைபெற்றது. முல்லைமணி ஐயாவுக்கான கௌரவத்தினை பொன்னாடை போர்த்து மாலை அணிவித்தார் மாவட்ட அரச அதிபர். மேலும் முல்லைமணி சிறப்பு முத்தெழின் முதற் பிரதியினையும் மாவட்ட அரச அதிபரே முல்லைமணி ஐயாவிடம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.
தொடர் உரைகளுக்கிடையில் நடன ஆசிரியர் செந்தூரான் அவர்களது நடன நிகழ்வு ஒருவித ஆர்வத்தினையும் உற்சாகத்தினையும் பார்ப்போருக்கு ஏற்படுத்தி இருந்தது.
முத்தெழில் நூலாய்வினை தனக்கேயுனிய பாணியில்.. முல்லை வலைய தமிழ் பாட உதவிக் கல்வி பணிப்பாளர் பீதாம்பரம் வழங்கியிருந்தார்.
அத்துடன் முத்தெழில் எனும் நாமம் சூட்டி அதற்கான அத்திபாரமாக நின்று முத்தெழில் 1 நூலை வெளியிட்டவர் தற்போதைய கரைதுறைப்பற்று பிரதேச செயலர் திரேஸ்குமார் அவர்களே. தொடர்ந்து முத்தெழில் 2 நூல் வெளியீட்டினை சிறப்புடன் நடாத்தியவர் முன்னாள் பிரதேச செயலர் இ.குருபரன் அவர்கள். தற்போது முத்தெழில் 3 தற்போதைய பிரதேச செயலர் அனுருத்தனன் தலைமையில் முல்லை மண்ணின் மைந்தன் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
சிறப்பாக நிகழ்வை கம்பீரக் குரலோன் கற்சிலைமடு அதிபர் நாகேந்திரராசா தொகுக்க.. ஏற்புரையினை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன் வழங்க.. நன்றியுரையினை ஒட்டுசுட்டான் இ. த.க. அதிபர் திருமதி வே. நித்தியகலா நிகழ்த்த இனிதே விழா நிறைவு பெற்றது.
-முல்லைத்தீபன்-






