எந்த பந்தாக இருந்தாலும் விரட்டி அடிப்பேன்: டில்ஷான்!!

344

dilshan

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் மாற்றத்தினை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் புதிய நடைமுறைகளின் படி ஒவ்வொரு இனிங்ஸிலும் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதோடு, பவர் பிளே அல்லாத ஓவர்களின் போது 4 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் எல்லைக்கோட்டில் களத்தடுப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர்.

இம்மாற்றங்களுக்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் மாற்றத்தினை வெளிப்படுத்த வேண்டும் என டில்ஷான் குறிப்பிட்டார்.

4 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் களத்தடுப்பில் ஈடுபடும் போது பந்து பழையதாக இருக்கும் பட்சத்தில் இறுதி ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்த முடியுமென டில்ஷான் தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் ஆரம்ப ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆடியிருந்தனர் எனக் குறிப்பிட்ட டில்ஷான் தற்போது இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால் ஆரம்ப ஓவர்களில் அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் அதிரடியாக ஆட முடியுமென அவர் தெரிவித்தார்.

எனினும் தன்னைப் பொறுத்தவரை ஒரு பந்து அடித்தாடக் கூடியதாகக் காணப்பட்டால் அது போட்டியின் முதலாவது பந்தாக இருந்தாலும் அதை அடித்தாடவே செய்வேன் எனவும் டில்ஷான் தெரிவித்தார்.

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் டில்ஷான் தனது 17வது ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.