
டெஸ்டில் இருந்து திசர பெரேரா ஓய்வு பெறுவதை தொடர்ந்து சிறந்த சகலதுறை வீரரை அணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா கடந்த சில மாதங்களாக ’பார்ம்’ இல்லாமல் தவித்து வருகிறார்.
சரியான ’பார்ம்’ இல்லாத காரணத்தால் இவருக்கு டெஸ்டில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான களமிறங்கிய திசர பெரேரா இதுவரை 6 டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார்.இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது பற்றி முன்னாள் இலங்கை அணியின் தலைவரும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷ்லே டி சில்வா கூறுகையில், ”திசர பெரேரா டெஸ்ட் போட்டியில் மட்டும் இல்லாமல் டி20 போட்டியிலும் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
சகலதுறை வீரராக அவர் அனைத்தையும் கற்றுக் கொண்டதாக நான் நினைக்கவில்லை. சில மாதங்களாக அவர் இலங்கை அணிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளார். அவரது திறமையை பற்றி எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் இலங்கை அணியில் அவரது பொறுப்பு பற்றி தற்போது கேள்வி எழுந்துள்ளது. எனவே சகலதுறை வீரருக்கான இடத்திற்கு பர்வீஸ் மஹரூஃப் எனது தெரிவாக இருப்பார்” என்று கூறியுள்ளார்.





