நடிகை கல்பனா உடலுக்கு நடிகர் நடிகைகள் அஞ்சலி : இன்று மாலை தகனம்!!

1006

Kalpana

பிரபல மலையாள நடிகை கல்பனா (50). இவர் ஐதராபாத்தில் நடிகர் நாகார்ஜூனாவுடன் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்த போது ஹோட்டல் அறையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த தகவல் அறிந்ததும் நடிகைகள் காவ்யாமாதவன், அபிராமி, காவேரி, ரோமா, சுவேதாமேனன் உள்பட மலையாள திரையுலகினர் ஐதராபாத் சென்று நடிகை கல்பனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நடிகை கல்பனா உடல் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

பிறகு அவரது உடல் சொந்த ஊரான கொச்சி அருகே உள்ள திருப்புணித்துறை என்ற இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்குள்ள லாயம் கூட்டம்பலம் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மலையாள, தமிழ், தெலுங்கு, கன்னட நடிகர், நடிகைகள் ஏராளமான பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிற்பகலில் நடிகை கல்பனா உடல் புதிய காவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் அஞ்சலி நடைபெற்றது. இதன் பிறகு மாலை 5 மணிக்கு அங்குள்ள மயானத்தில் நடிகை கல்பனா உடல் தகனம் நடைபெறுகிறது.

நடிகை கல்பனா மரணம் பற்றி கேரள அமைச்சர் திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன் கூறும் போது, ஒரு சிறந்த நடிகையை திரையுலகம் இழந்து விட்டது. அவரது குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகை கல்பனாவை கௌரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் நடைபெறும் என்றார். பிரபல மலையாள நடிகர் ஜெகதிஸ்ரீகுமாருடன் இணைந்து கல்பனா ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.