தெனாலி ராமன் கதைகள் – அரசியின் கொட்டாவி

520


திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை.

அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.



அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று வருந்தினாள்.



தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான்.



ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.


தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து “பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது” என்றான்.

மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் “விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்” என்றான்.


மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. “ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?” என்றார்.

“வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?” என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன்.

மன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும்
எண்ணி மகிழ்ந்தார்.

பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.