போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் ஈடுபடுவதை நிராகரிக்க முடியாது; ‘சனல் 4’க்கு பிரதமர் ரணில் தெரிவிப்பு !

275

ca1b4b836d3fc7206df370b97e2cf25a_XL

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் சம்பந்தப்படுவதை  நிராகரிக்க வில்லையென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.  ஐ.நா. தீர்மானம் தொடர்பான தனது உறுதிப்பாட்டை இலங்கை பேணிக் கடைப்பிடிக்கும் என்று “சனல்  4′ தொலைக்காட்சிக்கு பிரதமர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகளில் சர்வதேசம் சம்பந்தப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளாரா என்று கேட்கப்பட்ட போது, அவர் அதனை நிராகரிக்கவில்லையென்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் எதனை செய்கின்ற போதிலும் மக்கள் அனுகூலத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென்பதிலும் நல்லிணக்க நடவடிக்கைகளில் அது தொடர்பாகவே கவனம் செலுத்தப்படுவதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார். இந்த வருடம் மேயில் யுத்தத்துடன் தொடர்புபட்ட விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான அரசாங்கத்தின் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் போய்விடும் என பிரதமர் கூறியுள்ளார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக சிலரால் மதிப்பீடு செய்யப்பட்ட தொகை குறித்து சந்தேகங்கள் இருப்பதாக விக்கிரமசிங்க கூறியுள்ளார். உண்மையான தொகையை கண்டுகொள்வதில் நாங்கள் ஆர்வம் காட்டி வருகின்றோம் என்று அவர் கூறியுள்ளார். யுத்தத்தின் பின்னர் பலர் காணாமல்  போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வீடுகளுக்குத் திரும்பி வராதோர் அநேகமாக இறந்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும் விசாரணைகள் நடத்தப்படுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.