அழகிய நகரங்களை உருவாக்குவது மட் டும் போதாது, அந் நகரங்களின் வாழும் மக்கள் அழகிய எண்ணங்களுடனான மக்களாக வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நகர அபிவிருத்தியின்போது “சூழல் பாதுகாப்பு” கட்டயாமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேல் மாகாணம் மற்றும் கொழும்பு பெரு நகர அபிவிருத்தி திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் அழகிய நகரங்கள், அபிவிருத்தி அடைந்த நகரங்களை உருவாக்க வேண்டும். அதேவேளை அந்த அழகிய நகரங்களில் வாழும் மக்களும் அழகாக இருக்க வேண்டும். நான் புற அழகை கூறவில்லை. மாறாக அவர்களது மனங்கள் அழகிய எண்ணங்கள் கொண்டதாக அமைய வேண்டும்.
இலங்கை இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு. எனவே, அதனை பாதுகாத்துக் கொண்டே அனைத்தும் முன்னெடுக்ப்பட வேண்டும். விசேடமாக அபிவிருத்திகளின் போது மரங்களை வெட்டி, செடிகளை அழித்து அபிவிருத்திகளை மேற்கொள்ளல் ஆகாது. சூழலைப் பாதுகாத்துக் கொண்டே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண் டும். இவ்விடயத்தில் அனைவரும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.
நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இன்று ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ் ஆண்டிலிருந்து எமது நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து அபிவிருத்திகளையும் துரிதப்படுத்தி முன்னெடுப்போம். வெறுமனே இந்த அபிவிருத்திகள் கொழும்பு நகரங்களுக்கு மட்டும் வரையறுக்கப்படாது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அபிவிருத்தியின் போது மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியுடன் வாழும் நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அறிவுசார் புறச் சூழல் அனைத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். வெறுமனே கட்டட அபிவிருத்திக்குள் மட்டும் சிக்கிக் கொள்ளாது கல்வி, பொருளாதாரத்துறை, மக்களின் அடிப்படைத் தேவைகளும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.இந் நிகழ்வில் அமைச்சர்கள், கொழும்பு மாநகர மேயர், மேல் மாகாண முதலமைச்சர், எம்.பி.க்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களும் கலந்து கொண்டார்கள்.