தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!

431

3-OBILE-SMARTPHONE-BLM_HR_JPEG.212543663

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்காதிருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெறுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மக்களை திசை திருப்பி மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக இது காணப்படுகிறது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை தடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்தி இருப்பதாகவும் மக்களை அறிவுறுத்துவதற்காக போஸ்டர் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் சந்தேகம் ஏற்பட்டால் 1900 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.