ஆரஞ்சு பழத்தோலால் வழுக்கி விழுந்த மூதாட்டி: 12,000 யூரோ இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி!!

458

orange-peel

ஜேர்மனி நாட்டில் ஆரஞ்சு பழத்தோல் மீது கால் வைத்து வழுக்கி விழுந்த மூதாட்டி ஒருவருக்கு 12,000 யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ள Ruppichteroth என்ற நகரில் காய்கறி மற்றும் பலசரக்கு சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது.

இதே பகுதியில் வசித்து வரும் 71 வயதான மூதாட்டி ஒருவர் காய்கறிகள் வாங்குவதற்காக இந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். ஒவ்வொரு பகுதியாக பார்த்து வந்தபோது, தரையில் சில ஆரஞ்சு தோல்கள் கிடந்ததை கவனிக்க தவறியுள்ளார். சில அடிகள் முன்னே எடுத்து வைத்த மூதாட்டி ஆரஞ்சு தோல்கள் மீது கால் வைத்ததும் கால் வழுக்கி விழுந்துள்ளார்.

தரையில் விழுந்ததில் அவரது இடுப்பு மற்றும் கட்டை விரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டை சரியாக பராமரிக்காத காரணத்தினால் தான், தனக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த மூதாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. வழக்கினை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் 12,000 யூரோ அபராதத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.