தொடரை வென்று அவுஸ்திரேலியாவை வயிட்வாஷ் செய்த இந்திய அணி!!

245

IND

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி T20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் ஒருநாள் தொடரில் 4-1 என இந்திய அணி தோற்றாலும், T20 தொடரில் 2-0 என வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் கடைசி T20 போட்டி சிட்னியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஷேன் வட்சன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன்படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஷேன் வட்சன் 71 பந்துகளில் 124 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சாளர்கள், நெஹ்ரா, பும்ரா, அஷ்வின், ஜடேஜா மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 198 என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா அரைசதம் கடந்து 52 ஓட்டங்களும், ஷிகர் தவான் 26 ஓட்டங்களும், வீராட் கோலி 50 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆட்டமிழக்காமல் சுரேஷ் ரெய்னா 49 ஓட்டங்களும், யுவராஜ் சிங் 15 ஓட்டங்களும் எடுத்தனர்.

இவ் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இந்திய அணி 3-0 என அவுஸ்திரேலிய அணியை வயிட்வாஷ் செய்ததுடன் T20 தரப்படுத்தலிலும் முதலிடத்தைப் பிடித்தது.