குட் மோர்னிங் சொல்லும் நேரத்தில் குட் நைட் சொல்லும் இன்றைய இளைஞர்கள் : ஓர் எச்சரிக்கை!!

564

SLEEP

‘குட் மோர்னிங் சொல்லும் நேரத்தில் ‘குட் நைட்’ சொல்வது தான் இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஃபேஷன். சமூக வலைத்தளங்கள், டி.வி., சினிமா… இவற்றுக்குப் போக மிச்ச சொச்ச நேரம் தான் தூக்கத்திற்கு.

அப்படி ஆரம்பிக்கிற தூக்கம், அடுத்த நாள் மதியம் வரை நீடிக்கும். இவர்களின் தூங்கும் நேரம் குறையாவிட்டாலும் கூட பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இது பற்றிய தகவலை தென்கொரிய ஆய்வுக் குழு மருத்துவப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டிருந்தது. 47 முதல் 59 வயதிற்குட்பட்ட 1600 நபர்களை அந்த ஆய்வுக்கு உட்படுத்தினர்.

பங்கெடுத்தவர்களிடமிருந்து அவர்களின் வாழ்வியல் முறை, தூங்கச் செல்லும் நேரம், தூங்க எடுத்துக் கொள்ளும் நேரம், உடற்பயிற்சி முறை, உடற்பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் போன்ற தகவல்களைப் பெற்றனர்.

இவர்களில் ராக்கோழிகள் இளவயதினராக இருந்தபோதும், உடல் பருமன், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு, தசைத்தளர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இரவில் ஏற்படும் ஆழ்ந்த உறக்கம் பகலில் உறங்குபவர்களுக்கு கிடைப்பதில்லை. உறக்கம் கெட்டு நாளடைவில் ஆண்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது.

வளர்சிதை மாற்றத்தினால் பெண்களுக்கு தொப்பை விழுந்து அதன் பின்விளைவாக சர்க்கரை நோய், இதயநோய், பக்கவாதம் போன்றவை வருவதற்கு வாய்ப்புள்ளவர்களாகவும் இருந்தார்கள்.

இத்துடன் இவர்கள் தவறான உணவுப் பழக்கம், மது அருந்துதல், புகைப் பிடித்தல், போதை போன்ற தீய பழக்கங்களுக்கும் விரைவில் அடிமையாகிறார்கள். இதனால் தசைகள் விரைவில் தளர்ந்து வயதான தோற்றத்தை அடைவதோடு, மற்ற ஆரோக்கியப் பிரச்சினைகளும் இவர்களை விரைவிலேயே தொற்றிக் கொள்ளும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே இளமையையும் ஆரோக்கியத்தையும் தக்க வைக்க, ஜிம் மற்றும் பார்லர் தேடி அலைந்து காசை வீணாக்காதீர்கள். வீட்டில் உள்ள மற்றவர்களைப் பார்த்து கிண்டலடிக்காமல் நேரத்தில் உறங்கி, நேரத்தில் எழுந்து சாதாரண உடற்பயிற்சிகளை செய்தாலே சிக்ஸ் பேக்கும், ஸ்லிம் உடலும் நிச்சயம். இதைத் தான் அன்றே “Early to bed, and early to rise, makes a man healthy, wealthy and wise” என்று சொல்லி வைத்தார்கள்.