
பெங்களூரில் தான்சானியாவைச் சேர்ந்த மாணவியை பொதுமக்கள் நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.சபானா தாஜ் (35) என்பவர் கடந்த திங்கட்கிழமை மாலை தனது கணவருடன் நடைபயிற்சிக்கு சென்றபோது சூடானைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (21) என்ற மாணவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து தாஜ் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் தாஜ் பலியாகியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஹெசரகட்டா அருகே உள்ள ஆச்சார்யா கல்லூரியில் படிக்கும் இஸ்மாயிலை கைது செய்துள்ளனர்.இந்நிலையில் அந்த கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் தான்சானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கார் விபத்து ஏற்பட்டு 30 நிமிடங்கள் கழித்து அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை பார்த்த ஒரு கும்பல் அவரை நிர்வாணமாக்கி, தாக்கி பொலிசார் முன்னிலையிலேயே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது.அந்த மாணவியுடன் வந்தவர்களை தாக்கியதோடு, அவர்களது காருக்கு தீ வைத்துள்ளனர்.
இது பற்றி அந்த மாணவி அளித்த புகாரை பெற பொலிசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.மேலும், கிழிந்த உடையுடன் அந்த பெண் மாநகரப் பேருந்தில் ஏற முயன்ற போது அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அவரை சாலையில் பிடித்து தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.





