முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று முன்தினம் (01.02.2016) பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முன்னதாக விருந்தினர்கள் மாணவர்களின் இனிய இசை வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தோடர்ந்து மாணவர்களின் அணிநடை, விழையாட்டுப் போட்டிகள் என பல்வேறு பட்ட போட்டிகள் நடைபெற்றன.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் சிறப்பரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில்..
இன்று இப்பாடசாலையின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டேன் என்பதனை விட ஒரு பழைய மாணவனாக கலந்து கொண்டேன் என்பதுதான் மனமகிழ்வை தருகின்றது. நான் இப்பாடசாலையில் கற்றுத்தான் ஒரு வைத்தியனாக வரமுடிந்தது, ஒவ்வொரு மாணவர்களின் முயற்சியினால் தான் வெற்றி பெற முடியும்.
இங்கு அனைத்து மாணவர்களும் பல துறைகளிலும் முன்னேறி வரவேண்டும். எனக்கு கல்வி கற்பித்த ஆசான்களும் இங்கு ஒன்றாக வீற்றிருக்கின்றனர், அதை விட நான் கல்வி கற்பித்த மாணவன் இன்று ஒரு ஆசிரியராக வீற்றிருப்பது மிகவும் மகிழ்வான விடயம்.
ஓவ்வொருவரும் படிப்படியாகத்தான் முன்னேறி வருகின்றனர். நான் கல்வி கற்று முதல் ஒரு ஆசிரியராக கற்பித்து வந்தேன், பின்னர் எனது முயற்சியாலும் பெற்றோரின் ஆதரவோடும் நான் ஒரு வைத்தியராக வர முடிந்தது. நான் ஒரு வைத்தியராக வந்ததும் எனது தாய மண்ணில், எனது மாவட்டத்தில் மக்களுக்காக பணி செய்தேன், ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் எதுவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மாவட்ட வைத்திய சாலையில் மக்களுக்காக பணி செய்து வந்தேன்.
அது போன்று இன்றும் மக்கள் பணி செய்து வருகின்றேன் என்றும் பணி தொடர்வேன். அது போன்று இம் மாணவர்களும் பல துறைகளிலும் முன்னேறி எமது தாய் மண்ணுக்கும் எமது பிரதேச மக்களுக்கும் பணி செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.