
தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சுதந்திர தின நிகழ்வு ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதிலும், தமிழ் மொழியில் இசைக்கப்படவில்லை.
ஆயினும் நிகழ்வின் இறுதிநேரத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் தமிழிலும், பாடலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தூய்மையான ஹெலஉறுமய கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்பன்பில ஆகியோர் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இன்றைய சுதந்திர நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949 ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின வைபமொன்றின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





