
சில மாவட்டங்களில் காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக பல்வேறு வனப் பிரதேசங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.பதுளை, நுவரெலியா, மொனராகலை, கண்டி போன்ற மாவட்டங்களில் தீப்பிடித்த பல சம்பவங்கள் கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகியுள்ளதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். அத்துடன் சிலரினால் தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.
இவ்வாறு வனப் பிரதேசங்களுக்கு தீ வைத்த 05 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வனப் பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் பாரிய பிரச்சினைகள் பல ஏற்படுவதனால் அவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை – ரொசல்ல பிரதேச “பைனஸ்” வனப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. ஐம்பது ஏக்கரைக் கொண்ட இந்த “பைனஸ்” வனப்பகுதியின் 15 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வட்டவளை பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.





