
இந்த ஆண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி நூறு பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் தனிநபர் வருமானம் நான்காயிரம் டொலர்களாக உயர்ச்சி காணும் சாத்தியமும் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அடுத்த ஐந்தாண்டு காலத்தினுள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மிக நல்லதொரு நிலையில் கையாளப்பட்டு வருகின்றது. எனினும் இந்த ஆண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி நூறு பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 தொடக்கம் 6 வீதத்தில் தான் இருந்தது. 3.3 வீதமான பண வீக்கத்தை தனி ஒற்றை இலக்கமாக மாற்றும் முயற்சியை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
மொத்த தேசிய உற்பத்தியில் சேவைதுறை பாரிய பங்கினை வகிக்கின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டின் சுற்றுலா துறை உள்ளிட்ட சேவை துறை பாரிய அளவிலான முன்னேற்றத்தை கண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப் பகுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக அதிகரித்து வருமானம் 2.3 பில்லியனாக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் சுற்றுலா கைத்தொழில் துறைசார் தொழில் வைப்புக்களை ஐந்து இலட்சம் வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதுடன் இத்துறைசார் உற்பத்தி பல்வகைப்படுத்தலின் ஊடாக மொத்த தேசிய உற்பத்தியில் 1.6 சதவீதம் வரையிலான பங்களிப்பை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்தாண்டு காலத்தினுள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மொத்த தேசிய உற்பத்தியில் 75.5 வீதம் கடன் தொகையின் வீதமாகும். இப்போது நாட்டின் மொத்த கடன் தொகையானது 57 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஆகவே நாட்டின் அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்தியை பலமான வகையில் கையாள வேண்டுமாயின் இப்போதிருக்கும் அரசியல் சூழலை இன்னும் சில ஆண்டுகளுக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளது. பிரதான இரண்டு கட்சிகளினதும் பூரண ஒத்துழைப்பு இன்று நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு பாரிய பலமாக உள்ளதால் அதை தக்கவைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





