உலகில் முதல்முறையாக ’ஜிகா’ வைரசுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!!

483

Zika_AP_670850476149-1024x576

உலகில் முதல்முறையாக ’ஜிகா’ வைரசுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஜிகா வைரஸ் கர்ப்பம் தரித்த பெண்களை தாக்கினால் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைவாகவும், தலை சிறிதாகவும் பிறக்கின்றன.

பிரேசிலில் இப்படி ஏறத்தாழ 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை, வராமல் தடுக்க தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக சுகாதார நிலையம் சர்வதேச அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.

இந்நிலையில், ’மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் ‘ஜிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.இதுவே உலகில் முதன்முறையாக ‘ஜிகா’ வைரசுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் டாக்டர் கிருஷ்ணா எல்லா பேசுகையில், உலகில் முதலாவதாக ஜிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனம் நாமாக இருக்கலாம்.சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே ஜிகா வைரஸை அதிகார்வப்பூர்வமாக இறக்குமதி செய்து இந்த மருந்தை கண்டுபிடித்து பேடண்ட் பதிவு செய்துள்ளோம்.

ஆனால் இந்த மருந்தை மிருகங்களுக்கு சோதனை செய்து பார்த்து பின்னர் மனிதர்களுக்கு சோதனை செய்து பார்க்க வெகு காலம் ஆகலாம்.இவ்விவகாரத்தில் இந்திய அரசின் ஆதரவை நாடிஉள்ளோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உதவிசெய்ய முன்வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பேசுகையில், பாரத் பயோடெக் ‘ஜிகா’ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை நாங்கள் அறிவியலாளர்கள் கருத்தின்படி ஆய்வுசெய்ய வேண்டும்.ஆய்வை முன்னோக்கி எடுத்துசெல்லும் சாத்தியத்தை பார்க்கவேண்டும்.மேலும், இது மேக் இன் இந்தியா தயாரிப்புக்கு ஒருநல்ல உதாரணம் என்று கூறியுள்ளார்.