
9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 9 ம் திகதி முதல் மே 23 ம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் (ராஜ்கோட்) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
2 ஆண்டு தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவில்லை. சென்னை அணியில் இருந்து தலைவர் டோனி, அஸ்வின், டுபிளசிலிஸ், ராஜஸ்தானில் இருந்து ஸ்டீவன் சுமித், ரகானே ஆகியோர் புனே அணிக்கும், ராஜ்கோட் அணிக்கு ரெய்னா, ஜடேஜா, மேக்குல்லம், பிராவோ (சென்னை), பலக்னெர் (ராஜஸ்தான்) ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புனே, ராஜ்கோட் அணிகளை தவிர மற்ற 6 அணிகள் 91 வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ளது. இதில் 37 வெளிநாட்டு வீரர்கள் அடங்கும். 9–வது ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் நாளை பெங்களூரில் நடக்கிறது. 351 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். இதில் 230 இந்திய வீரர்கள் உள்ளனர். 121 பேர் வெளிநாட்டு வீரர்கள். 130 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள்.
ஒவ்வொரு அணியும் தலா ரூ.66 கோடியை வீரர்களுக்காக செலவு செய்ய வேண்டும். தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்காக அளிக்கப்பட்ட தொகையை கழித்து விட்டு மீதமுள்ள தொகையில் வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதில் டெல்லி அதிக பட்சமாக ரூ.37.15 கோடி இருப்பு வைத்து உள்ளது. ஐதராபாத் ரூ.30.15 கோடி, பஞ்சாப் ரூ.23 கோடி, கொல்கத்தா ரூ.17.95 கோடி, மும்பை ரூ.14.40 கோடி, பெங்களூர் ரூ.21.62 கோடியும் இருப்பு வைத்து உள்ளன.
புனே, ராஜ்கோட் அணிகளிடம் தலா ரூ.27 கோடி இருப்பு உள்ளது. 61 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் முக்கியமானவர் யுவராஜ் சிங். அவரை கடந்த ஆண்டு டெல்லி அணி ரூ.16 கோடிக்கு எடுத்தது. ஆனால் யுவராஜ்சிங்கை தக்க வைக்கவில்லை. அவரது அடிப்படை தொகை ரூ.2 கோடியாகும்.
மேலும் இஷாந்த்சர்மா, கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், ஆசிஷ் நெக்ரா, தினேஷ் கார்த்திக், தவல் குல்கர்னி, சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, மைக் ஹஸ்சி, கனே ரிச்சர்ட்சன், மிட்செல் மார்ஷ் ஆகிய 11 வீரர்களின் அடிப்படை தொகையும் ரூ. 2 கோடி.
யுவராஜ்சிங்கை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது 20 ஓவர் போட்டியில் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டதால் அவரது மவுசு கூடியுள்ளது. இதனால் அவர் மீது அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது.சென்னை, ராஜஸ்தான் அணியில் இருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்கிறார்கள்.





