எமது கணினி வழியே நாம் இணையத்தில் உலா வருகையில், பல்வேறு தகவல்களையும் தரவுகளையும் பெற்றுக்கொள்கின்றோம். மின்னஞ்சல்களை பார்வையிடுகிறோம். சமூக வலைத்தளங்களில் எமது கருத்துக்கள் மற்றும் படங்களைப் பதிவு செய்கின்றோம். இதற்கு மேலதிகமாக எமது தரவுகளையும் தரவேற்றி இணையத்தில் சேமிக்கின்றோம்.
இவ்வாறாக உலகில் இணையத்தினை பயன்படுத்தும் பயனாளர்களின் தரவுகள் உலகின் பல பகுதிகளில் காணப்படும் தரவு சேமிப்பு மையங்களில் சேமிக்கப்படுகின்றன. அவசியம் ஏற்படுகையில் பயனாளர்கள் அத்தரவுகளைப் பெற்றுப் பயன்படுத்துகின்றனர். வருங்காலங்களில், இத்தரவு மையங்கள் மக்களுக்கு அண்மையாக இருக்கும் வகையிலும் வேறு அனுகூலங்களுக்காகவும் கடலின் கீழே அமைக்கப்படவிருக்கின்றன. இது தொடர்பான ஆய்வொன்று மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உலகளாவிய சனத்தொகைப் பரம்பலினை நோக்குகையில் உலகின் பாதி சனத்தொகையினர் கடற்கரையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே வாழ்கின்றனர். எனவே, கடலினுள் தரவு மையங்கள் பல அமைக்கப்படும்போது அவை பெரும்பாலான மக்களுக்கு அண்மித்ததாக அமைந்து, சேமிக்கப்பட்ட தரவுகள் பயனாளர்களை விரைந்து அடைய வழியேற்படும் என்பது வெளிப்படை. அத்துடன் பிரமாண்ட அளவிலான தரவுகளைத் தரவு மையங்கள் கையாளுகையில் சேமிக்கும் நினைவகங்களில் இருந்து அதிகமான வெப்பமும் வெளியேறும்.
எனவே இந்த மையங்களை குறைவான வெப்பநிலையில் பேணுவதற்கு அதிகமான மின்சக்தி பயன்படுத்தப்படுகின்றது. கடலின் கீழ் தரவு சேமிப்பு மையங்களை நிறுவுகையில், அவை மக்களுக்கு அருகே இருக்கத்தக்கதாக அமைவதுடன், அம்மையங்களைக் குளிர்விப்பதற்கு கடல்நீரின் குளிர்ச்சித்தன்மையைப் பயன்படுத்தமுடியும்.
கணினி உலகில் அசைக்க முடியாத இடத்தினைத் தக்கவைத்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் கடலின் கீழான தரவுமையத்திட்டம் Natick, கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் கடற்படை நீர்மூழ்கி அதிகாரி Sean Jamesஎண்ணத்தில் உருவான திட்டத்திற்கு நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, கடந்த வருடம் ஆகஸ்ட் – நவம்பர் மாத காலப்பகுதியில் முதலாவது சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இப்பரிசோதனையில் Leona Philpot எனப் பெயரிடப்பட்ட 7 அடி விட்டமும் 10 அடி நீளமும் உள்ள உருளை வடிவக் கொள்கலனில் தரவு சேமிப்பகங்கள் உள்ளடக்கப்பட்டு, அதைச் சூழவுள்ள பகுதி அமுக்கப்பட்ட நைதரசன் வாயுவினால் நிரப்பப்பட்டது. இத்தொகுதி அமெரிக்காவின் பசுபிக் சமுத்திரப் பகுதியில் கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடலினுள் இடப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அவதானிப்புக்கள் 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஆய்வுகள் நிறைவுபெற்றன.
ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதையடுத்து இவ்வாறான கடலின் கீழான தரவு மையங்களை அமைக்கும் பணிகள் தீவிரம் பெற்றுள்ளன. தரவு மையக் கொள்கலன் 20 வருடங்கள் நீடித்து உழைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளதுடன், உள்ளே கட்டமைக்கப்படவிருக்கும் தரவு சேமிப்பகங்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றொரு ஆய்வு முயற்சியொன்று எதிர்வரும் வருடம் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டிருக்கின்றது. இது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கடற்பகுதியில் அல்லாவிடின் வட ஐரோப்பாவை அண்டிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வுகள் வெற்றி பெறும் பட்சத்தில் கடலின் கீழான ஆய்வுமையங்கள் எதிர்காலத்தில் உலகில் உருவாகும்.
கணினி போன்ற இலத்திரனியல் சாதனங்களுக்கு நீர் பரம வைரியாகவே காணப்படுகின்றது. எனவே, தரவுகளைச் சேமிக்கும் நிலையங்களை கடலினுள் அமைப்பது என்பது பலராலும் அதிர்ச்சியுடனேயே நோக்கப்படுகின்றது. ஏதாவது தவறுகள் மற்றும் விபத்துக்களால் தரவுமையம் பாதிப்படைந்தால், சேமிக்கப்பட்ட அனைத்துத் தரவுகளும் இழக்கப்படும் சாத்தியம் மறுப்பதற்கில்லை.