பொன்சேகா இன்று சத்தியப்பிரமாணம்!!

1000

sarath-fonseka-2009-12-13-6-40-0

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். பிற்பகல் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்த்தனவின் ஆசனத்தை சரத் பொன்சேகாவுக்கு வழங்க, அக் கட்சியின் செயற்குழு நேற்று தீர்மானித்தது. முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டதன் மூலம் அரசியலில் பிரவேசித்தார்.

அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அவர், பின்னர் ஜனநாயகக் கட்சியை உருவாக்கினார். மேலும் கடந்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தனது ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர், அண்மையில் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டது.

இந்தநிலையில், நேற்றைய தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை பொன்சேகாவுக்கு வழங்க ஏகமனதாக தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

இந்த சந்திப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தனி கட்சியாக செயற்படுவது தொடர்பில் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து, இன்றையதினம் சபாநாயகரின் முடிவு அறிவிக்கப்படவுள்ளது.