
முன்னணி வீரர்கள் காயம் அடைந்திருப்பது இலங்கை அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அணியின் தலைவர் சந்திமால் கூறியுள்ளார்.இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது.இந்த தொடர் குறித்து அந்த அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் பேட்டியளித்துள்ளார்.அவர் கூறுகையில், ”ஆசியக்கிண்ணம் மற்றும் டி20 உலகக்கிண்ண தொடருக்கு முந்தைய இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ஆனால் இலங்கை அணியில் நான்கு முதல் ஐந்து முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுகிறார்கள். டில்ஷான் ஏற்கனவே கைவிரல் முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் முதல் போட்டியில் விளையாடமாட்டார்.மேலும், நேற்றைய வலைப்பயிற்சியின் போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.அணியில் ஏற்ற இறக்கம் இருக்க தான் செய்யும். இந்த தொடரில் சிறப்பாக விளையாட ஆவலுடன் உள்ளோம்” என்று கூறியுள்ளார்.





