மீண்டும் சுருண்டது சிம்பாவே : 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

348

india

சிம்பாவே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் ரோகித், ரெய்னா அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிம்பாவே சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என வலுவான முன்னிலையில் உள்ளது.

நான்காவது ஒருநாள் போட்டி இன்று புலவாயோவில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் வீராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், வினய் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு எதிர்பார்த்தது போல புஜாரா, மோகித் சர்மா ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். சிம்பாவே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக சிகும்பரா 50 ஓட்டங்களும், வாலர் 35 ஓட்டங்களும், சிபண்டா 24 ஓட்டங்களும், மசகட்சா 10 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பில் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டும், மோகித் சர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 145 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 30.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோகித் ஷர்மா 64 ஓட்டங்களும், ரெய்னா 65 ஓட்டங்களும் எடுத்தனர். இதன் முலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் உள்ளது.