
மகாராஷ்டிர மாநில முதல்வரின் மனைவி அம்ருதா, மாய வித்தை மூலம் வரவழைக்கப்பட்ட தங்க சங்கிலியை சாமியாரிடமிருந்து பெற்றுக்கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. புனே நகரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.
அதில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதாவுக்கு சாமியார் குருவானந்த் சுவாமி ஒரு தங்க சங்கிலியை வழங்குகிறார். அந்த சங்கிலி மாய வித்தை மூலம் காற்றி லிருந்து வரவழைத்து கொடுத்ததா கக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவர் அவினாஷ் பாட்டீல் கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் எங்கள் முன்னிலையில் இதுபோன்ற அதிசயத்தை நிகழ்த்தினால், அந்த சாமியாருக்கு நாங்கள் ரூ.21 லட்சம் பரிசு வழங்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து அம்ருதா கூறும்போது, “மிகவும் வயதானவர் என்ற அடிப்படையில் சாமியாருக்கு மதிப்பு கொடுத்து அவரை வணங்கினேன். அப்போது சாமியார் எனக்கு சங்கிலி ஒன்றை பரிசாக வழங்கினார். அதை நான் பெற்றுக் கொண்டேன். ஆனால் மாய வித்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. வயதில் மூத்தவர்களை வணங்க வேண்டும், மரியாதை தர வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து நான் வளர்க்கப்பட்டேன். அந்த வழியை நான் தொடர்ந்து கடைபிடிப்பேன்” என்றார்.





