
இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி, இந்திய அணிக்கான சரியான எச்சரிக்கை மணி என முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இளம் இலங்கை அணிக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த நிலையில் கவாஸ்கர் மேலும் கூறியிருப்பதாவது,
இலங்கை அணியின் புதிய பந்துவீச்சாளர்கள் குறித்து இந்திய வீரர்கள் சிந்திப்பது அவசியம். ஏனெனில் இதற்கு முன்னர் பார்த்திராத சில பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதல்முறையாக ஆடும்போது அவர்களுடைய பந்துவீச்சை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். எனவே அவர்கள் பந்துவீசிய விடியோவை இந்திய வீரர்கள் பார்த்திருக்கலாம்.
இலங்கை பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகவும், துல்லியமாகவும் பந்துவீசினர். பந்தை மிக நேர்த்தியாக வீசினர். முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை இழந்த பிறகாவது இந்திய அணி எச்சரிக்கையோடு ஆடியிருக்க வேண்டும்.
இலங்கை பந்துவீச்சாளர்களை எச்சரிக்கையோடு அணுகியிருந்தால், இந்திய அணி கூடுதலாக 30 முதல் 40 ஓட்டங்கள் வரை குவித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம்.
இந்தத் தோல்வியை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்திய அணியினருக்கு நான் கூறும் மேலான அறிவுரை. அடுத்த இரு போட்டிகளுக்கும் இந்திய அணி சிறப்பாக தயாராக வேண்டும் என்றார்.





