06 நாட்களின் பின் சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட இராணுவ வீரர் உயிரிழப்பு!!

731

Hanumanthappa

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி, 35 அடி ஆழ பனியில் புதைந்திருந்து 6 நாட்களுக்குப் பின்னர் உயிடருடன் மீட்கப்பட்ட இராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி இன்று (11.02) உயிரிழந்தார்.

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட ஹனுமந்தப்பா கடந்த 8ம் திகதி உயிருடன் மீட்கப்பட்டார். 6 நாட்களுக்குப் பிறகும் 35 அடி ஆழத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கோமா நிலைக்கு சென்ற அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்த ஹனுமந்தப்பாவின் நிலை இன்று காலை மிகவும் மோசமடைந்தது. ஹனுமந்தப்பா நலமுடன் திரும்ப நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

ஹனுமந்தப்பாவின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிதி பாண்டே என்ற பெண், தானாக முன்வந்து சிறுநீரகம் தானம் அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹனுமந்தப்பா இராணுவத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அதில், 10 ஆண்டுகளை தன் விருப்பப்படி மிக சவாலான இடங்களிலேயே பணிபுரிந்துள்ளார்.

கடந்த 2ம் திகதி, சியாச்சினின் வடபகுதியில் 800 x 400 அடி என்ற அளவிலான பனிச் சுவர் உடைந்து சரிந்ததில், அதன் இடிபாடுகள் இராணுவ முகாமை மூடிக் கொண்டதால்ன 10 வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

சிறப்பான துளையிடும் கருவி, தோண்டும் கருவி, மின் ரம்பங்கள், 20 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி வெப்பம், உலோகத்தை கண்டறியும் ராடார்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் மூலம் மீட்பு பணி நடந்தமை குறிப்பிடத்தக்கது.