காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடல்!!

1002

snowfall-med

காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநிலத்தின் லடாக் பகுதியை காஷ்மீருடன் இணைக்கும் 300 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த பத்து நாட்களாக பொழிந்துவரும் தொடர்பனியால் தலைநகர் ஸ்ரீநகரில் சாலைகளில் பனி உறைந்து கிடக்கிறது. வீடுகளின் கூரைகள், மரங்கள் வெள்ளை போர்வையை போர்த்தியது போல் பனிப்பொழிவால் மூடிக்கிடக்கின்றன.

மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், வாகனங்களின் டயர்கள் சறுக்கி விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், பனிப்பொழிவின் விளைவாக சாலையோரங்களில் மீண்டும் பனிச்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தாலும் 300 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இதே காரணத்தால் 434 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மூடப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மொகல் சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளும் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், உள்ளூர் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளையும் பனி மூடியுள்ளதால் உள்ளூர் போக்குவரத்தும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மக்கள் சிரமப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.