
இந்தியா – இலங்கை இடையேயான இறுதி இருபதுக்கு 20 ஆட்டம் ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
மூன்று ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள இலங்கை அணி, புணேவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை ஆட்டம் காண வைத்து வெற்றி கண்டது. குறிப்பாக, அந்த அணியின் அறிமுக பந்துவீச்சாளர்களான ராஜித, சமீர, ஷானக ஆகியோர் இந்திய துடுப்பாட்ட வீரர்களை திணரடித்தனர்.
கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை முற்றிலுமாக கைப்பற்றியிருந்த இந்திய அணிக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் முன்னெச்சரிக்கையுடன் களமிறங்கி வெற்றிபெற்றது.
இதையடுத்து, 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், இந்த இரு அணிகள் இடையேயான இறுதி ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில், ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் துடுப்பாட்ட வீரர்களான தவான், ரோஹித், ரெய்னா, ரஹானே, பாண்டியா ஆகியோர் சிறந்த முறையில் ஓட்டங்களைக் குவித்தனர். பந்துவீச்சாளர்கள் அஸ்வின், நெஹ்ரா, ஜடேஜா, பூம்ரா ஆகியோர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி இலங்கை வீரர்களின் விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு வரிசையில் தோனி மேற்கொண்டிருந்த மாற்றம் தகுந்த பலன் அளித்தது. ஆகவே, மூன்றாவது ஆட்டத்திலும் இந்திய அணியின் வியூகத்துக்கு தகுந்த பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில், பந்துவீச்சாளர்கள் ராஜித, சமீர ஆகியோர் சீறி எழுவார்கள் எனத் தெரிகிறது. அணியின் மூத்த வீரரான டில்ஷான் துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயல்படலாம்.
இரு அணிகளுமே ஒரு தோல்வி மற்றும் ஒரு வெற்றியைக் கண்டுள்ளதால் இந்த மூன்றாவது ஆட்டத்தில் மிகுந்த கவனத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, துடுப்பாட்ட வரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் யுவராஜ் சிங்கை அதற்கு முன்னதாக களமிறக்க இயலாது என்று தலைவர் தோனி தெரிவித்தார்.
“முதல் இரு இடங்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கோலி மூன்றாவதாகவும், ரெய்னா நான்காவதாகவும் களமிறங்குகின்றனர். இவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
ஆகவே, யுவராஜை இதற்கு இடையில் களமிறக்குவது சற்று கடினம். எனினும், திறமைமிக்க துடுப்பாட்ட வீரரான அவருக்கு வரும் ஆட்டங்களில் வாய்ப்பு கொடுக்க முயற்சிப்பேன். ஆனால், அணியின் வெற்றியே எங்களுக்கு முக்கியம்´ என்று தோனி கூறினார்.





