வங்கதேசத்திலும் கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அணித் தலைவர் அஷ்ரபுல் நீக்கம்..

607

ஐபிஎல் ஆட்ட நிர்ணய சர்ச்சை கிரிக்கெட் உலகை உலுக்கி வரும் நேரத்தில் அதே முறையில் வங்கதேசத்தில் நடந்த பிபிஎல்(BPL) போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்து சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மத் அஷ்ரபுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் உலகை ஆட்ட நிர்ணய விவகாரம் கலக்கி வரும் நிலையில் தற்போது வங்கதேசத்தை சூறாவளியாக சுற்ற ஆரம்பித்துள்ளன. அஷ்ரபுல் நீக்கப்பட்டது குறித்து வங்கதேச கிரிக்கெட்சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிபிஎல் போட்டியில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதை ஊழல் எதிர்ப்பு மற்று் பாதுகாப்புப் பிரிவிடம் ஒத்துக் கொண்டுள்ளார் அஷ்ரபுல்.

எனவே விசாரணை முடிந்து முழு அறிக்கை வெளியாகும் வரை அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்படுகிறது. அஷ்ரபுல் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டார் என்றார். பிபிஎல் தொடரில் பங்கேற்ற டாக்கா கிளாடியேட்டர்ஸ் மற்றும் சிட்டகொங் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஆட்ட நிர்ணயம் நடந்தது. இதில் அஷ்ரபுல் தொடர்பு கொண்டிருந்தார் என்பது குற்றச்சாட்டாகும்.

இந்தப் போட்டியில் டாக்கா அணி தோல்வி அடைவதற்காக 12,800 அமெரிக்க டொலர் பணத்தை அஷ்ரபுல் பெற்றார் என்பதும் குற்றச்சாட்டாகும். இதற்காக அவருக்கு காசோலையும் கொடுக்கப்பட்டுள்ளது .ஆனால் என்ன கொடுமை என்றால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.

மேலும் பரிசல் பர்னர்ஸ் அணியுடனான போட்டியின்போதும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளார் அஷ்ரபுல். வங்கதேச அணியில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் அஷ்ரபுல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2007 முதல் 2009 வரை அவர் வங்கதேச அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். 61 டெஸ்ட் போட்டிகளில் 2737 ஓட்டங்களை அஷ்ரபுல் எடுத்துள்ளார். இதில் ஆறு சதங்கள் அடஙகும். அதேபோல 177 ஒரு நாள் போட்டிகளில் 468 ஓட்டங்களை எடுத்துள்ளார் அஷ்ரபுல். 2012ம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் பிபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.