கச்சத்தீவு திருவிழா: 5 நாள்கள் மீன் பிடிக்கத் தடை!!

495

52050900_fish2

கச்சத்தீவு தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு பாக் நீரிணைப்பு மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இம்மாதம் 17ம் திகதி முதல் 5 நாள்களுக்கு இராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கச்சத்தீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா இம்மாதம் 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில், இந்திய பகுதியிலிருந்து 3,000துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திருவிழாவையொட்டி பாக் நீரிணைப்பு மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு உட்பட்ட இராமேசுவரம், தனுஷ்கோடி, கச்சத்தீவு கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக கடலோர காவல்படை பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேலும் இராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இம்மாதம் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரை தொடர்ந்து 5 நாள்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல இராமேசுவரம் மீன் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதேவேளை, புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவு கடல்பகுதியில் இலங்கை கடற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கப்பலிலிருந்து டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவற்றை கச்சத்தீவில் திங்கள்கிழமை இறக்கியுள்ளனர். அப்போது அப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் இராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அவர்களைப் பார்த்த இலங்கை கடற்படையினர், கம்பு, கட்டைகளால் தாக்கி, வலைகளை சேதப்படுத்தி, இப்பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து விரட்டியடித்துள்ளனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.