
பாதசாரி கடவைகளை கடக்கமுயன்ற இருவர், இரண்டு வாகனங்களால் மோதுண்டு பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.28 வயதான யுவதியும், 45 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.ஹோமாகம, கல்விலவத்த மாஓயா மாத்தைக்கு அண்மையில் உள்ள பாதசாரி கடவையை கடந்துகொண்டிருந்த 28 வயதான யுவதியொருவர் மீது, லொறி மோதியதில் அந்த யுவதி உயிரிழந்துள்ளான்.
புளத்கோஹுபிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட பட்டதாரியான அந்த யுவதி, தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றுகின்றார்.கடமைக்காக அவர், இன்று புதன்கிழமை காலை சென்றுகொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த யுவதி, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பலியாகியுள்ளார் என்றும், லொறியின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஹிக்கடுவ பத்தேகம வீதியில் சுமங்கள வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள பாதசாரி கடவையில், வீதியை கடந்துகொண்டிருந்த 45 வயதான பெண்மீது, சிறிய ரக லொறி மோதியதில் அப்பெண் உயிரிழந்துள்ளார்.இவ்வனர்த்தம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.





