
கல்வி அமைச்சின் அனுமதியோடு ஹற்றனில் உள்ள தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றில் அதிக படியான விலைக்கு பாடப்புத்தகங்களை குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விற்பனை செய்வதனால் பல அசௌகரியங்களுக்கு பெற்றோர்கள் முகங்கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பாடசாலையில் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை ஒரு விலைக்கு பெற்றுக்கொண்டு அவ்விலைக்கு மேலதிகமாக பாடசாலை நிர்வாகம் பிரிதொரு விலையினை நியமித்து அம் மாணவர்களுக்கு இப்பாட புத்தகங்ளை வழங்கி வருகின்றனர்.
மேலும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விலையை மறைத்து அதற்கு மேல் பாடசாலையின் பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்வதாகவும் விற்பனைக்கான ஒரு விலை சீட்டும் கொடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை 850 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் குறித்த பாடசாலையில் நடாத்தப்படும் பல நிகழ்வுகளுக்கு அதிகப்படியான பணம் அறவிடுவதாகவும் பாடசாலையின் மாதாந்த கட்டணமாக 2500 ரூபா முதல் 5000 ரூபா வரையிலான தொகையை அறவிடப்படுகின்ற இந்த நிலையில் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கும் பெற்றோர்கள் இது குறித்து பாடசாலை நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு உரிய தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என கேட்கின்றனர்.
அதேபோல் மேற்படி பாடசாலையில் போதியளவு வசதிகள் இல்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் ஏ.இராசையாவிடம் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கு வழங்கிய பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சின் ஊடாகவும் தனியார் நிர்வாகங்கள் ஊடாகவும் பல சிரமங்களுக்கு மத்தியில் பெறப்பட்டு வருகின்றது.
குறித்த புத்தகங்கள் கொழும்பு பகுதியிலிருந்து கொண்டு வருவதனால் போக்குவரத்து செலவு அதிகரிப்பதன் காரணமாக அதிகப்படியான விலைக்கு விற்பதாகவும் அதனை தாம் ஒப்புக்கொள்வதாகவும், ஏதிர்வரும் ஆண்டிலிருந்து குறித்த புத்தகங்களை மாணவர்களே சென்று வாங்குவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.





